Thursday, October 6, 2016

குற்றவாளிகள்


"கிளம்பிட்டோம் மாமா, ஹோட்டலுக்கு போயி டிஃபனை முடிச்சிட்டு நேரா அங்க தான் போறோம்" ஃபோனில் பேசி முடித்துவிட்டு வைக்கின்றான். 
ஜீன்ஸ் ஃபேண்ட் , கதர் சட்டை , கையில் வெங்கல காப்பு , நெற்றியில் குங்குமம்..பார்த்தவுடனே தெரியுது பையன் சென்னை கிடையாது என்பது. 

நல்ல மழை பெய்து விட்டுருந்த நேரம் , சென்னை குரோம்பேட்டை GST சாலையில் ஓரமாக நண்பர்கள் நாலு பேர் நடந்து போயிகிட்டு இருக்காங்க, 
விர் விர்ரென கார் பைக் , மாநகர பேருந்து, ஆட்டோ, மக்கள் என அனைவரும் பரபரப்பாக எதையோ தேடி ஓடிக்கொண்டு இருக்காங்க.
 " மச்சான் நல்ல ஹோட்டலா பாரு ராத்திரி வேற ஒழுங்கா சாப்பிடாமல் பஸ் ஏறி தொலைச்சிட்டோம், வயிறு நல்லா காந்துது" என நால்வரில் ஒருவன் சொன்னான். "உலகமே அழிஞ்சாலும் என் மச்சான் ஒரு வேளை பட்டினி கிடக்க மாட்டாண்டா" 
என நக்கலாக இவன் பதில் சொல்ல மெதுவாக நடந்து சாலையோறம் இருக்கும் குழிகளில் தேங்கியுள்ள அழுக்கு நீர் வாகனங்களின் உதவியால் சாலையில் செல்பவர்களின் உடைகளை தழுவிக்கொண்டு இருந்தது, அதில் இருந்து மெதுவாக தப்பித்து நடந்து கொண்டு இருந்தார்கள்..!

திடீரென யாரோ முனகும் சத்தம் , சாலை ஓரமாக அடிப்பட்டு கிடக்கின்றான் ஒருவன் கிட்டத்தட்ட உடல் முழுக்க சேற்று நீர் படிந்து இருந்தது எப்படியும் குறைந்தது ஒரு மணி நேரமாவது அவன் அவ்வாறு முனகிக்கொண்டு கிடந்திருக்கனும், குறைந்தது 100 பேராவது அவனை கண்டுவிட்டு "நமக்கேன் பிரச்சினை" என ஒதுங்கி சென்றிருக்க கூடும், 
பையனுக்கு எப்படியும் 20 வயசுக்குள் இருக்கும், சிக்னலை தாண்ட வேகமாக வந்து அங்கு சாலையோரம் இருந்த குழியையும் தாண்ட முயற்சிக்கையில் வேகமாக சென்ற ஏதோ ஒரு வாகனம் அடிச்சிருக்கனும், கூட்டம் மிகுந்த சாலை என்பதால் யாரும் கண்டுக்கவில்லை போல, உயிருக்கு போதுமான ரத்தம் கொஞ்சம் கொஞ்சமா குறைந்திருக்கு என்பது அங்கு சேற்றோடு கலந்துள்ள ரத்தம் சொல்லுது.

ஏன் சென்னை வந்திருக்கோம்..? என்ன பிரச்சினையில் நாம் சிக்கியிருக்கோம்..? இதை செய்தால் வேற என்னென்ன பிரச்சினைகள் வரும்..? இப்படி எதையும் யோசிக்கவில்லை, அந்த பையனை அப்படியே வாரி அனைத்து தோளில் போடுகின்றான் 

" மச்சான் அந்த வண்டிய மடக்குடா என கத்துகின்றான்  நிற்காமல் போய்விடுகின்றது  வண்டி, "
டேய் ஊடால பூந்து மறைச்சு நிறுத்துடா என கத்திக்கொண்டே  அங்கு போன காரை நிறுத்தி வண்டியில் அந்த பையனை ஏற்றுகிறார்கள் 

"அண்ணே பக்கத்தில் ஏதாவது ஆஸ்பத்திரி இருந்தா பாருங்கண்ணே"  என வழக்கமாக கொடுக்கும் மரியாதையாகவே சொன்னான் ,
ஆனால் வண்டி ஓட்டுனர் குறைந்த வயதுக்காரன்  தான் 
" பதட்ட படாதீங்க பாஸு சீக்கிரம் போயிடலாம் ஒன்னும் இல்ல" என ஆறுதல் சொன்னபடி வண்டியை செலுத்தினான்..!

மருத்துவமனையில் எப்போதும் ஆக்ஸிடெண்ட் கேஸ எடுக்க சொல்லப்படும் அனைத்து ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷண்களையும் புதிதாக கொண்டு வந்திருந்த 500 ரூபாய் நோட்டு கட்டுகளில் உடைக்கப்பட்ட சில பல நோட்டுகளை கொண்டு தடைகளை தாண்டி ஒரு வழியாக அந்த பையனை சிகிச்சைக்கு அனுப்பியாச்சு..!

இவனுடைய ஃபோன் அடிக்குது..!

ஹலோ..! 
சற்று பதட்டமாகவே எடுக்கின்றான், 
" குரோம்பேட்டை ஸ்டேஷனில் இருந்து ரைட்டர் பேசுறேன் தம்பி, வக்கீல் மாது சொன்ன அந்த பசங்க நீங்க தானே..?
"டெய்லி காலையில 10 மணிக்குள்ள வந்து கையெழுத்து போட்டுடனும்பா, லேட் பண்ணுனீங்கன்னா இந்த SI வேற ஏதாவது பிரச்சினையை கிளப்பிடுவாருப்பா, ஒரு மாதிரியான ஆளு , முதல் நாள் தானே அதனால சமாளிச்சுக்குறேன் சீக்கிரம் வந்து சேருங்கப்பா.
ஃபோனை தன் சட்டை பாக்கெட்டில் வைக்கின்றான் 

"அந்த பையனை அட்மிட் பண்ணினது நீங்க தானே சார் இந்தாங்க சார், அந்த பையனோட பர்ஸ் & செல்ஃபோன் எல்லாத்தையும் பத்திரமா வச்சிக்கோங்க  " என அந்த ஆஸ்பத்திரியின் நர்ஸ் கொடுத்துவிட்டு செல்கின்றாள் .

மச்சான் வாடா சீக்கிரம்..,
ஸ்டேஷனுக்கு போயிட்டு வந்து பார்த்துக்கலாம் என நண்பன் லேசாக கெஞ்ச அங்கிருந்து அனைவரும் நகர்ந்தனர்.

                                                  ******************************************

No comments:

Post a Comment